இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளின் முதல் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இணைய வழியில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இந்தியா மற்றும் பிரான்ஸுடன் இணைந்து இந்த கூட்டத்தை ஒருங்கிணைக்கும் ஜப்பான், சீனா உட்பட அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இதில் சீனா கலந்துகொள்ளுமா என்பது நிச்சயமற்றது என்று ஜப்பானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இருதரப்புக் கடனாளிகளுக்கு 7.1 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டுமென அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.

அதில் 3 பில்லியன் சீனாவிற்கும், 2.4 பில்லியன் டொலர் பாரிஸ் கிளப்பிற்கும், 1.6 பில்லியன் டொலர் இந்தியாவிற்கும் வழங்கப்பட வேண்டும்.

இலங்கை தனது உள்நாட்டு கடனில் ஒரு பகுதியை மறுசீரமைப்பு செய்வதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. மே மாதத்திற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share.
Exit mobile version