பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து தற்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண தீர்மானித்து தொழில் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

நியாயமற்ற வரிக் கொள்கையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து விலகி மார்ச் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை 56 நாட்களுக்குப் பின்னர் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பது அரசியல் அதிகாரத்தின் அச்சுறுத்தல்களுக்கோ அல்லது அவர்களின் அதிகாரத்திற்கோ தலைவணங்கும் தொழிற்சங்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து செயல்படும் தொழிற்சங்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், அதன்படி செயற்படாவிட்டால் சிறைத்தண்டனை அல்லது சொத்துக்களை பறிமுதல் செய்ய நேரிடும் எனவும், ஆனால் தமது தொழிற்சங்கம் அதற்கு அடிபணியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்கம் முன்வைத்துள்ள பிரச்சினை இப்போதும் அப்படியே உள்ளதாகவும், அவற்றைத் தீர்க்க என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை நிறுத்துவதாகவும் அவர் கூறினார்.

எந்தவொரு தொழிற்சங்கமும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, ​​அந்த நிபுணர்களின் சேவையைப் பெறுபவர்கள் சில அசௌகரியங்களை அனுபவிப்பது பொதுவான அம்சமாகும் என்றும், துரதிஷ்டவசமாக இங்கு அவர்களின் சேவையைப் பெறுபவர்கள் மாணவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் தொழில்சார் நடவடிக்கைகளினால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிந்து தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தமது தொழிற்சங்கம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினர் தொடர்பில் அரசாங்கம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியிருந்தால் தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்திருக்கும் எனவும் ஆனால் அவ்வாறான தேவை அரசாங்கத்திற்கு இல்லை என்பது தெளிவாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக பல்வேறு நபர்கள் ஊடகங்களுக்கு முன் தெரிவித்த போதிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை எனவும் ஜனாதிபதி இலங்கை திரும்பிய பின்னர் கலந்துரையாடல் நடத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version