யாழ்ப்பானம் வடமராச்சி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முன்பாக, அமைதியான முறையில் போராட்டம் நடத்த மல்லாகம் நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரியும். குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும், நேற்று முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தநிலையில், குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு. தெல்லிப்பளை மற்றும் பலாலி காவல்துறையினர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தன.

இதற்கமைய, களத்திற்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்த மல்லாகம் நீதிவான், தையிட்டி விகாரைக்கு முன்பாக, அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இதேநேரம், யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமானது.

இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு தையிட்டியில்

அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version