அரசியலமைப்பின் 21வது திருத்தம் வரைவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்ற விஜயதாச ராஜபக்ச, தாம் முதலில் அமைச்சுப் பதவியை ஏற்க விரும்பாவிட்டாலும், அரச தலைவர் மற்றும் பிரதமர் முன்வைத்த பலத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் தெரிவு இல்லாமல் பதவியை ஏற்றுக் கொண்டார் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுயேச்சையாக பதவி வகிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணமாகவே பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் ஸ்திரமின்மையை இல்லாதொழிப்பதே தனது முதல் பொறுப்பு எனவும், அதற்காக அரசியலமைப்பின் 21வது திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று நிறைவேற்றப்பட்டவுடன் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version