ஜனாதிபதி முன், பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. முகம் பார்க்கவில்லை. அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம். ‘ஜனாதிபதி’ என்ற பதவி நிலையை மதிக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுவதற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பிலே அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, ‘கோ ஹோம் கோட்டா’ – என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. கட்சிக்காகவே நான் அமைச்சு பதவியை ஏற்றேன். கட்சியுடனேயே தொடர்ந்தும் பயணிக்க எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சவாலை ஏற்று, மூன்று மாதங்கள் அமைச்சராக செயற்படுவேன், பஸிலோ வேறு நபர்களோ காலை வாரினால் வெளியேறுவேன். கோட்டாபயவை பாதுகாக்க முற்படவில்லை. அவர் பதவி விலகியாக வேண்டும். இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு ஸ்தீரமடைந்த பின்னர், ஜனாதிபதி பதவி விலகுவார் என நம்புகின்றேன். அமைச்சரவை அமைச்சுக்களை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்ததன் மூலம் அவர்கள் அபாயத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களின் அடுத்த இலக்காக தாங்கள் இருக்க முடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பதாக அவர் கூறினார். ஆனால், தனது குடும்பத்தினரின் முழு ஆதரவு தனக்கு இருப்பதாக அவர் கூறினார்.

 

வன்முறையில் ஈடுபடுவது தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாகாது எனவும் தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் 6 மாதங்களில் தேர்தலை நடத்த முன்வந்துள்ளதாகவும், அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதகமாக பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

தாம் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு விமர்சிக்க விரும்பவில்லை என்றும், நாட்டுக்கு உதவுவதற்கு ஒரு பாத்திரத்தை வகிக்க விரும்புவதாகவும் பெர்னாண்டோ கூறினார்.

அதேவேளைமேலும், பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தானும் மற்றவர்களும் பல முறை வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும், சஜித் பிரேமதாசவுக்கு சில நிபந்தனைகள் இருப்பதாகவும், அதனால் உடன்பட மறுத்துவிட்டதாகவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச நாட்டை ஆள சிறந்த தலைவர் மற்றும் நாட்டை வழிநடத்த வேண்டிய சிறந்த தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version