2023 ஆம் ஆண்டுக்கான சிறு போகத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03) விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

உரம் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை தீர்மானித்தவாறு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி உரம் கொள்வனவு செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாவும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாவும் மானியமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்த சிறு போகத்தில் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
*ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் வழங்க மாகாண மட்டத்தில் நிலையங்கள்!*

பெற்றோரால் பராமரிக்க முடியாத 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண மட்டத்தில் நிலையங்களை நிறுவி, அதனூடாக குறித்த குழந்தைகளை பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை, கொலை செய்யப்படுகின்றமை மற்றும் கைவிடப்படுகின்றமை ஆகிய சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 60 சிறுவர்கள் கைவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தற்போதைய சட்டத்திற்கு அமைய குழந்தைகளை கைவிட்டுச் செல்லும் பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என திணைக்களம்.

புதிய திருத்தத்திற்கு அமைய குழந்தைகளை நிலையங்களில் ஒப்படைத்துச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்காக தண்டனை சட்டக்கோவையில் கொண்டுவரப்படவுள்ள திருத்தம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சின் ஊடாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

Share.
Exit mobile version