முகத்திடல் மற்றும் அலரி மாளிகையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்ட பேருந்துகளின் மொத்த மதிப்பு ரூ. 400 மில்லியனாகும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அதேநேரத்தில் தீ வைக்கப்பட்டதில் 50 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதுடன் மேலும் 25 பேருந்துகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பஸ் சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் மட்டத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய நிலைமை பஸ் உரிமையாளர்களை கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை பஸ் உரிமையாளர்கள் ஊக்குவிக்கவில்லை அவர்கள் தங்கள் பேருந்துகளை வாடகைக்கு விட்டு தங்கள் வேலையைச் செய்து வருவதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.