கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4300 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

*மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,*

அதிகூடிய டெங்கு நோயாளர்கள்
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கிழக்கு மாகாணத்தில் இந்த வருடம் முதல் நான்கு மாதங்களிலும் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணம், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணம் உட்பட இரண்டு மரணங்களும் 4300 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1800 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் மட்டும் 600 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதனை
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மார்ச் மாதம் 600 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும் ஏப்ரல் மாதத்தில் 700 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலை நகரம், உப்புவெளி மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் கிணற்றில் டெங்கு குடம்பிகளை தடுப்பதற்காக கப்பீஸ் என்று அழைக்கப்படும் மீன்கள் காணப்படுகின்றன.

அதனை நீங்கள் உங்களுடைய பொது சுகாதார பரிசோதகர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுமாறும், சீமெந்து தொட்டிகளை முற்றாக அகற்றுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Exit mobile version