மருதானை பகுதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இருந்து, மனித பாவனைக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் உணவுகளை நீண்டகாலத்துக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டிகளும் குறித்த களஞ்சியத்திலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த களஞ்சியத்தின் உரிமையாளர், நீண்ட காலமாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின், திடீர் சோதனை பிரிவு அதிகாரி யூ.கே.பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கையின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,ஒரு முறையோ அல்லது பல முறையோ உணவு தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த களஞ்சியத்திலிருந்து மீட்கப்பட்ட அனைத்து பொருட்களையும், முத்திரையிட்டு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், சந்தையில் இது போன்ற முறையற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையால், வர்த்தகர்களும், நுகர்வோரும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து தகவலறிந்தால், உடனடியாக தமக்கு அறியப்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version