முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்கள் மீது தொடரப்பட்ட 29 வழக்குகளில் 41 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, அத்தனகல்ல, நீர்கொழும்பு, மினுவாங்கொடை, கம்பஹா, மஹர பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வலஸ்முல்ல நீதிமன்றத்தினால் 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்தது.

அத்துடன், மாத்தறை, தெய்யந்தர நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அமைவாக, தலா ஒரு இலட்சம் ரூபா அபராதமும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் 6 வழக்குகளில் 6 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும், சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version