மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த மாணவர்களுக்காக கல்வியமைச்சு வழங்கும் 5,000 ரூபா கொடுப்பனவு மற்றும் தொழில்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் மீளச் செலுத்தும் அடிப்படையில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் 15,000 ரூபா கடனையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சபையில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது ஆசிரியர் கல்விச் சேவையில் நூற்றுக்கு நாற்பது வீதமானோரே உள்ள நிலையில் அதற்குத் தேவையான தரப்பினரை நியமிப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

மேற்படி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திற்குள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இஸட் கோருக்கு அமைய விடய தானங்களுக்கு ஏற்ப திறமை அடிப்படையில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

சிலர் மேன்முறையீடு செய்துள்ளனர். அதனால்தான் சற்று தாமதம் ஏற்படுகிறது.எனினும் எதிர்வரும் மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும்.

அது மட்டுமன்றி அவர்களுக்கு கல்வியமைச்சினால் தற்போது மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேலதிகமாக அவர்களின் உணவு தேவைக்காக வங்கிகள் ஊடாக 15000 ரூபா வரை கடன் வழங்கப்படுகிறது. அவர்கள் கல்வியை முடித்துக் கொண்டு தொழிலுக்குச் செல்லும் போது அதனை மீளச் செலுத்தும் அடிப்படையிலேயே அது வழங்கப்படுகிறது.

Share.
Exit mobile version