களனி பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் 12 மாதங்களாகப் பரீட்சைக்கான பெறுபேறுகளை வழங்கவில்லையென்றும், இதனால் மாணவர்கள் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உயர்கல்வி தொடர்பில் காணப்படும் அக்கறைகள் மற்றும் இதனை விஸ்தரிப்பதற்கான சாத்தியமான முன்மொழிவுகளை ஆராயும் நோக்கில் இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைக்கப்பட்டிருந்தது.

கல்வி என்பது உரிமையாக இருக்க வேண்டுமே தவிர சலுகை அல்ல என்பதை வலியுறுத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர், உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழும் அழுத்தங்களை தாங்க முடியாமல் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பேராதனை இணை சுகாதார விஞ்ஞான பீடம் இன்னும் கல்விக்கான நாட்காட்டியை முன்வைக்கவில்லை என்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் இன்னும் பரீட்சைகளை நடத்தவில்லை என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
உயர்கல்வித் துறையில் காணப்படும் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு உயர்கல்வி அமைச்சு, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர் பிரதிநிதிகளை இக்குழு முன்னிலையில் அழைப்பதற்கும் குழு தீர்மானித்தது.

Share.
Exit mobile version