கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% மறை பெறுமானமாக பதிவானதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டதுடன், அதில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கடந்த வருடத்திற்கான அறிக்கையை மத்திய வங்கி ஆளுநர், நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று கையளித்தார்.

சுதந்திரத்தின் பின்னரான இலங்கை வரலாற்றில், 2022 ஆம் ஆண்டிலேயே மிகவும் கடினமான காலகட்டம் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை எதிர்நோக்கியுள்ள இலங்கை, ​2022 ஆம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு மூலங்களால் எழுந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்புலத்தில், வரிக் குறைப்பு, முன்னறிவித்தல் இன்றி சேதன விவசாயத்தை ஆரம்பித்தல், வௌிநாட்டு நாணய கையிருப்பு முடிவடையும் வரை வௌிநாட்டுக் கடனை செலுத்த முயற்சித்தமை, முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமை போன்ற காரணங்கள் மூலம் பொருளாதாரத்தில் பாரிய அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வௌிநாட்டு நாணய நெருக்கடி, சமூக பொருளாதார பிரச்சினையாகவும், சமூக அரசியல் பிரச்சினையாகவும் வலுவடைந்து, வர்த்தகங்கள் மீதான நம்பிக்கை சீர்குலைந்து, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மூலம் வாழ்க்கைச் செலவும் உற்பத்திச் செலவும் வெகுவாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் எரிபொருள் விலை 185 வீதத்தினாலும் பஸ் கட்டணம் 140 வீதத்தினாலும் நீர் கட்டணம் 120 வீதத்தினாலும் மின்சார கட்டணம் 114 வீதத்தினாலும் அதிகரித்ததாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு வகைகளில் பாண் விலை 166 வீதத்தினாலும் பால்மா 150 வீதத்தினாலும் பழங்கள் 112 வீதத்தினாலும் விலை அதிகரிப்பை வௌிப்படுத்தியதுடன், இதற்கு முன்னர் கண்டிராத வகையில் அந்த ஆண்டிற்குள் விலைகள் உயர்வடைந்ததாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் கொள்வனவு சக்தி 22.7 வீதத்தினாலும், அரச ஊழியர்களின் கொள்வனவு சக்தி 20. 6 வீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version