நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறனான சேவையை முன்னெடுப்பதற்காகப் பொலிஸ் திணைக்களத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தார்.

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராய்வதற்காக பொலிஸ் திணைக்களம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டிருந்தபோதே அக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் இக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.

இலங்கை பொலிஸில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

2419 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு வெற்றிடம் இருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டு இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு உத்தேசித்திருந்தபோதிலும் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போனது என்பதும் இங்கு தெரியவந்தது.

பொலிஸாரின் பழைய நிலை மாற்றப்பட்டு, எதிர்காலத்தில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்குப் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.இதன்படி எதிர்காலத்தில் பெண் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தோன்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொலிஸாரிடமுள்ள காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காலாவதியான கண்ணீர்ப்புகைக் கண்டுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் காணப்படும் காலாவதியான கண்ணீர் புகைக்குண்டுகளை அகற்றுமாறும் குழு அறிவுறுத்தியது. அத்துடன், பொதுக் கலவரங்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது சர்வதேச மரபுகளின்படி கண்ணீர்ப் புகைக்குண்டு உள்ளிட்டவற்றின் பயன்பாடு குறித்து அறிக்கையொன்றைத் தயாரித்து கோபா குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

பொலிஸ் பதவி உயர்வுகள் தொடர்பான பிரச்சினைகள், பொலிஸ் வெகுமதி நிதி நிர்வாகம், வீதி விபத்துக் கட்டுப்பாடு, குற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் ஏனைய பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Share.
Exit mobile version