சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டிகளை வாடகைக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இதனை முன்னோடித்திட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு நேற்று (25) பாராளுமன்றத்தில் கூடியதுடன், போக்குவரத்து அமைச்சு, புகையிரத திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கொழும்பு மாநகர சபை, மேல் மாகாண வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தன.

இலத்திரனியல் டிக்கட் சேவையை ஆரம்பித்தல், பஸ் வண்டிகளுக்கு GSP தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தல், தனியார் போக்குவரத்து சேவையின் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாணயங்கள் மற்றும் பணத்தாள்களை பயன்படுத்துவதால் தினசரி சுமார் ஒரு பில்லியன் அளவில் பணம் புழங்குவதாகவும், மத்திய வங்கியின் உதவியுடன் நவீன இலத்திரனியல் டிக்கட் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Share.
Exit mobile version