கொரிய வேலைகளுக்கான ஒதுக்கீட்டை தாண்டி இந்நாட்டிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய மனிதவள திணைக்களத்தின் பணிப்பாளருடன் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொரிய வேலைகளுக்கு இந்த நாட்டிற்கு 6,500 வேலை ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை தாண்டி 8,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய மொழித் தேர்ச்சி பெற்று தற்போது இணையத்தளத்தில் வேலை எதிர்ப்பார்த்துள்ள, இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் இணையத்தளத்தில் காலாவதியாகவுள்ள உற்பத்தி துறையில் தொழில் எதிர்ப்பார்த்துள்ள 600 பேரை அந்நாட்டு கப்பல் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, இணையதளத்தின் தொழில் பிரிவில் இருந்து பணிப் பிரிவை கப்பல் கட்டுமானப் பிரிவுக்கு மாற்றி இந்த தொழிலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அவ்வாறு கப்பல் கட்டுமானத் துறை தொழிலுக்காக செல்ல விரும்பும் நபர்கள் விரைவில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வருடம் முதல் கொரிய மொழித் திறன் பரீட்சை தற்போதைய கணினி அடிப்படையிலான CBT முறைக்குப் பதிலாக UBT முறையைப் பயன்படுத்தி நடத்தப்படும் என்றும் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளர் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

Share.
Exit mobile version