கண்டி – தெல்தொட்டை – பாலுகம பகுதியில் நிவாரணத்தின் அடிப்படையில் அரிசியை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அரிசியை பெற்றுக் கொள்ள சென்ற மக்களிடம் இருந்து தலா 50 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி அதிகாரிகளின் ஊடாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் தெல்தொட்டை – பாலுகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி அரிசி வழங்கப்பட்ட போது அதனை பெற்றுக் கொள்ள சென்றிருந்த மக்களிடம் தலா 50 ரூபா கட்டணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் அதிகாரிகளின் அன்றைய நாளுக்கான வேதனத்தை செலுத்துவதற்கு என தெரிவித்து குறித்த கட்டணம் அறவிடப்பட்டதாக அங்கு அரிசியை பெற்றுக் கொள்ள சென்றிருந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சுமார் 250 க்கும் மேற்பட்டோரிடம் குறித்த கட்டணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தெல்தொட்டை பிரதேச செயலாளர் ஆத்ம ஜயரத்ன தெரிவிக்கையில்,

குறித்த சந்தர்ப்பத்திலேயே தமக்கு அது குறித்து அறிய கிடைத்ததாகவும், இந்த விடயம் தொடர்பில் சமுர்த்தி முகாமையாளரிடம் எழுத்துமூல விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version