அழிந்து வரும் 100,000 செங்குரங்குகளை ஆய்வு நோக்கங்களுக்காக சீன தனியார் நிறுவனமொன்றுக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்து கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சீன தூதரகம் சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் இதனை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனா அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள சீன தூதரகம் 1988 இல் சீனா தனது வனவிலங்கு சட்டத்தினை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பிற்கான சீனாவின் அர்ப்பணிப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட அமலாக்கத்தின் அடிப்படையில் உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக அதன் அந்தஸ்தையும் தூதரகம் அந்த பதிவில் எடுத்துரைத்துள்ளது.

இலங்கையின் விவசாய அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளரும் இந்த விடயத்தை தெளிவுபடுத்திய பின்னர் சீன தூதரகத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

Share.
Exit mobile version