கொத்மலை ஓயாவில் மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதாகவும், அவற்றை உணவுக்காக எடுக்க வேண்டாம் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பேவெல முதல் மெரயா, எல்ஜின், அக்கரகந்த வரையான ஆற்றில் சுமார் 12 கிலோ மீற்றர் வரை மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதக்கின்றன.

இந்நிலையில் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பிரதேசவாசிகளும், தோட்டத் தொழிலாளர்கள் இறந்த மீன்களை எடுத்துச்செல்கின்றனர் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு இறந்த மீன்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஷங்க விஜேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

மீன்கள் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொத்மலை ஓயாவில் மீன்கள் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீர் மாதிரிகள் மற்றும் இறந்த மீன்களுள் சில பரிசோதனைக்காக பேராதனை கன்னோருவையில் உள்ள பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை கால்நடை வைத்தியர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

Share.
Exit mobile version