இலங்கையில் தற்போது அத்தியாவசியமான சுப்பர் டீசல் மற்றும் ஆட்டோ டீசல் கையிருப்பில் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பான அறிவிப்பை வழங்கிய அமைச்சர், இன்று மாலைக்குள் நாட்டிலுள்ள 1190 முக்கிய எரிபொருள் நிலையங்களுக்கும் டீசல் விநியோகத்தை நிறைவு செய்வதற்கு அமைச்சு உத்தேசித்து வருவதாக தெரிவித்தார்.

“அடுத்த சில வாரங்களுக்கு தேவையான டீசல் கையிருப்பு விநியோகத்தை தொடர நாங்கள் உத்தேசித்துள்ளோம்” என்று அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோல் விநியோகம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, இலங்கையில் இன்னும் தேவையான பெற்றோல் இருப்பு இல்லை எனவும், நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி முதல் பெற்றோலுடன் கூடிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் பணம் செலுத்துவதற்கு தேவையான டொலர்களை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் அரசாங்கத்தினால் அதனை விடுவிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புக்காக 53 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முன்னைய கொடுப்பனவு செலுத்தப்பட உள்ளதாகவும், பரிவர்த்தனையை கையாளும் வங்கி முந்தைய மற்றும் தற்போதைய கொடுப்பனவுகள் தீர்க்கப்படும் வரை தொடர மறுத்துள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டின் பேரில், பணம் செலுத்துவதற்கான பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கப்பலை விடுவிப்பதற்கான இரண்டு கொடுப்பனவுகளுக்கான தீர்வுக்கான ஒப்பந்தமும் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கான வழிகள் குறித்து அமைச்சரவைக்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“கப்பல் இன்று அல்லது நாளை விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீசலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எங்களிடம் பெட்ரோல் இல்லை. எனவே, வரிசையில் நிற்க வேண்டாம்,” என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்புடன் பெற்றோல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

வரிசையில் நிற்க வேண்டாம்.

“எங்களுக்கு போதுமான பெட்ரோல் கிடைத்தால், அதை அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்க வெள்ளிக்கிழமையிலிருந்து குறைந்தது மூன்று நாட்கள் தேவைப்படும். எனவே, தயவு செய்து பெட்ரோலுக்காக பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்’’ என்று பொதுமக்களிடம் கூறினார். (நியூஸ் வயர்)

Share.
Exit mobile version