நாட்டில் இடம்பெற்ற பல வன்முறைச்சம்பவங்களையடுத்து பாராளுமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை இரட்டிப்பாக்க பாதுகாப்புத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் இன்று (16) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போதே பாராளுமன்றத்தில் பாதுகாப்பை அதிகரிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஓயா பகுதியில் கடற்படையினரின் ரோந்து பணிகளும், பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் ரோந்து பணிகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும், உளவுத்துறை கண்காணிப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படைகளின் அதிகாரிகளையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (15) பாராளுமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்தார்.
இதன் பாதுகாப்பு தொடர்பாக அவர் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த வாரத்தில் நான்கு நாட்கள் பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதுடன், ஒவ்வொரு நாளும் இந்த பாதுகாப்பு ஏற்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
பாதுகாப்பு சோதனைகளும் நாளை (17) முதல் நீடிக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.