கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த மீனகயா ரயிலின் கழிவறையில் சிசுவை கைவிட்டுச் சென்ற தாய் மற்றும் தந்தையை எதிர்வரும் 17ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (10) பிளாஸ்டிக் கூடையொன்றில் சிசுவை வைத்து, ரயில் கழிவறையில் விட்டுச் சென்ற தாய் தந்தை ஆகியோர் கொழும்பில் இருந்து பண்டாரவளை, கொஸ்லந்த வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கொஸ்லந்த மீரியபெத்தயில் வசிக்கும் 26 வயதான தந்தை மற்றும் பண்டாரவளை நாயபெத்த தோட்டத்தில் வசிக்கும் 25 வயதான தாய், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, பண்டாரவளை பதில் நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவரையும் புதன்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பதில் நீதவான், அன்றைய தினத்தில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் கட்டளையிட்டார்.

அதற்கமைய கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிசுவின் தாய் மற்றும் தந்தையின் விளக்கமறியல் உத்தரவை நீடிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Share.
Exit mobile version