தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் தனது இரண்டு மாற்றுத் திறனாளி மகன்களுடன் தாயொருவர் கிணற்றில் குதித்துள்ள சம்பவம் கெபத்திகொல்லாவ கணுகஹவெவ பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்ற மகனும் தாயும் கவலைக்கிடமான நிலையில் கெபதிகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெபதிகொல்லாவ கணுகஹவெவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சுனில் சாந்தகே ரவிந்து மிஹிரங்க என்ற 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் குறித்த இளைஞரின் 48 வயதான தாயும் ஒன்பது வயதுடைய மகனும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த குறித்த இளைஞர் முற்றாக ஊனமுற்றவர் என்றும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய சகோதரன் காது கேளாதவர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக மாற்றுத்திறன் கொண்ட இரு பிள்ளைகளுக்கும் தேவையான மருத்துவ வசதிகளை செய்ய முடியாததால் குறித்த பெண் தற்கொலை செய்ய கிணற்றில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சிவில் பாதுகாப்புப் படைவீரரான குறித்த பிள்ளைகளின் தந்தை நேற்று அதிகாலை வேலைக்குச் சென்றுவிட்டு 10 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவி மற்றும் பிள்ளைகளைக் காணாததால் சுற்றும் முற்றும் தேடியுள்ளார். அப்போது மனைவியைக் கண்டவர் பிள்ளைகள் கிணற்றில் கிடப்பதை பார்த்துள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்