ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் ​பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

அந்த இணையளத்தள செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த நாட்டின் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடொன்றில் இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என்றும் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது என பொலிஸ் தலைமையக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்காக அந்த குழு சூழ்ச்சிகளை செய்துள்ளது என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் ​போல, படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் எந்தவொரு தகவலும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, செய்தியில் கூறப்பட்டுள்ளதைப் போல விசாரணைகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆகையால் அந்த இணையளத்தள செய்தியானது முழுமையாக பொய்யாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும் என்று பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version