இந்த அண்டுக்கான முதல் சந்திர கிரகணம் மே 15-16 ஆகிய தேதிகளில் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை எங்கே எப்போது காணலாம் ஆகிய விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்குகிறோம்.
சந்திர கிரகணம் என்றால் என்ன?
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும் சூரியனும் பூமியில் இருந்து நேர் கோட்டில், எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் (total lunar eclipse) நிகழும். பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது பகுதி சந்திர கிரகணம் (partial lunar eclipse) நிகழ்கிறது.
பூமியின் உள்நிழல் ஆங்கிலத்தில் ‘umbra’ என்றும், புறநிழல் ஆங்கிலத்தில் ‘penumbra’ என்றும் அழைக்கப்படுகிறது.
புறநிழல் சந்திர கிரகணத்தின்போது, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.
சூரியன் – பூமி – நிலவு ஆகிய மூன்றும் நேர்கோட்டில் இருக்கும்போது, பூமியின் உள்நிழல் நிலவின்மீது விழுந்து அதை மறைக்கும். அதனால் நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) தெளிவாகப் புலப்படும்.
பூமியின் உள்நிழல் நிலவின் மீது விழாமல், அதன் புறநிழல் நிலவின் மீது விழுவது புறநிழல் நிலவு மறைப்பு எனப்படும். இதை வேறு சொற்களில் கூறுவதானால், பூமியைச் சுற்றி வரும் நிலவு, பூமியின் புறநிழல் வழியாகக் கடந்து செல்லும்.
மே 15 – 16ஆம் தேதிகளில் நிகழும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். அதாவது நிலவு பூமியின் உள்நிழலைக் கடக்கும்போது முழுவதுமாக மறைக்கப்படும்.
இதை வெறும் கண்களால் பார்க்க முடியுமா?
இந்த சந்திர கிரகணத்தை பார்க்க எந்த சிறப்பு உபகரணமும் உங்களுக்கு தேவையில்லை வெறும் கண்களால் இதை பார்க்க முடியும்.. இருப்பினும் பைனாகுலர் மற்றும் டெலஸ்கோப்பை கொண்டு நீங்கள் அதை பார்க்கும்போது சிவப்பு நிற நிலவை நன்றாக பார்க்கலாம்.
ஐரோப்பின் பெரும்பகுதிகளில் திங்களன்று பொழுது விடிவதற்கு முன்னதாக இதை பார்க்க முடியும். ஞாயின்று அமெரிக்காவில் இது முழுவதுமாக காட்சியளிக்கும்.
எப்போது காண முடியும்?
மே 15 – 16 ஆகிய தேதிகள் வெவ்வேறு பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை காண முடியும். அதாவது சந்திர கிரகணம் நிகழும்போது அது தென்படும் நாடுகளில் அது மே 15 மற்றும் 16ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவாக அது இருக்கும்.
எங்கெல்லாம் இதை காண முடியும்?
அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் இந்த சந்திர கிரகணத்தின் எல்லாக் கட்டங்களையும் காண முடியும். ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் பெரும் பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தை முழுவதுவமாக காண முடியும்.
இலங்கை நேரப்படி மே 16ஆம் தேதி, பகல் நேரத்தில் நிகழவுள்ள சந்திர கிரகணத்தின்போது, நிலவு முழுமையாக பூமியின் உள்நிழலைக் கடந்து செல்லும். பூமிக்கு மிகவும் நெருக்கமான புள்ளியில் அல்லது அந்தப் புள்ளிக்கு அருகில் நிலவு இருக்கும் என்பதால், வழக்கத்தைவிட பெரிதாவும், அடர் நிறத்திலும் தெரியும். அது ‘சூப்பர் ப்ளட் மூன்’ (super blood moon) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
நிலவு ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது?
சந்திர கிரகணத்தின்போது சந்திரனை அடையும் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக பயணிப்பதால் நிலவு சிவப்பு நிறமாக மாறுகிறது. பூமியில் ஒவ்வொரு பகுதியிலும் சந்திர கிரகணத்தின்போது நிகழும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் ஒளி சந்திரன் மீது எதிரொளிக்கும். எனவே நிலவு அப்போது சிவப்பு நிறத்தில் தெரியும்.
இலங்கையில் சந்திர கிரகணம் எப்போது?
இலங்கையில் திங்களன்று காலை 7.02 மணிக்கு கிரகணம் தொடங்கும். காலை 7.57 மணியிலிருந்து பூமியின் நிழல் சந்திரன் மீது விழத் தொடங்கும். காலை 8.59 மணிக்கு நிலவின் மீது பூமியின் நிழல் முழுவதுமாக படிந்த நிலையில் நிலவு ஆரஞ்சு வண்ணத்தில் தோன்றும். கிரகணம் 10.23 மணிக்கு தொடங்கி 12.20 மணிக்கு முடியும். பகல் நேரம் என்பதால் அதை இலங்கையில் காண முடியாது.
(BBC)