மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ அல்லது அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலே அது தீவிர பிரச்சினையாக மாறும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் பேராசிரியர் கபில தஹயனகே தெரிவித்தார்.
கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேச செயலாளர் பிரிவின் பல கிராமங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.
10ஆம் மதியம் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன் 11ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்றபட்டதாக மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.
இந்நிலையில், அப்பகுதியில் இதுபோன்ற அதிர்வுகள் அதிகம் ஏற்பட்டால் மற்றும் அதிர்வுகளின் அளவு அதிகரித்தால் அவதானமாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.
மொனராகலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்த அவர், இந்தியப் பெருங்கடல் தட்டுக்கு அருகாமையில் இலங்கை அமைந்திருப்பதால் எவ்வித தொடர்பும் இருக்க முடியாது என்றார்.