13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணமே நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மையற்ற நிலையை தோற்றுவித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் குறித்து மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள் காட்டி, சி.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அகிம்சை என்பது இந்து, பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் முக்கிய கோட்பாடு எனவும், ஒரு பகுதி மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விடயத்தை தேரர்களால் எவ்வாறு போதிக்க முடியும் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களிடம் வினவியுள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கில் 3000 வருடங்களுக்கும் மேலாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் புராதன வரலாற்றை உத்தியோகபூர்வமாக எழுதுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் இந்திய மற்றும் சர்வதேச வரலாற்றாசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதியை கோருமாறும் மகாநாயக்க தேரர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Exit mobile version