அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று(புதன்கிழமை) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் புதிய திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.

அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவ்வளவு அதிக வரி விதிப்பது நியாயமற்றது என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

தங்களது கோரிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்தால் எதிர்வரும் 17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Share.
Exit mobile version