மருதானையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துடன், முதற்கட்ட அறிக்கை ஆணைக்குழுவிடம் இன்று (06) கையளிக்கப்படவுள்ளது.

75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு அதிக தொகை செலவிடப்பட்டதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை (03) இரவு மருதானையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மற்றொரு குழுவினர் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸாரால், நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று சம்பவ இடத்துக்கு விஜயம் செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்த முதற்கட்ட அறிக்கை இன்று (06) ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் தொடரும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியின்மையின் போது கைது செய்யப்பட்ட மூவர் மாளிகாகந்த நீதவான் மு்ன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சனிக்கிழமை (04) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version