நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர நிதி கோரியுள்ளார்.
அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், சில கப்பல்களுக்கு நிலுவை மற்றும் முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான நிலக்கரி ஏற்றுமதியை இலங்கை பெற முடிந்தது என்றும் நிலக்கரி கெள்வனவுக்கு 456 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் 5 கப்பல்கள் நாட்டுக்கு வருகை தந்ததாகவும் இந்த மாதத்தில் சுமார் ஐந்து முதல் ஏழு நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த மாதத்துக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரி கையிருப்பு தமது நிறுவனத்திடம் உள்ளதாகவும் சுமனசேகர தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.