வங்குரோத்து நாடு என்று இலங்கைக்கு குத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர் விரைவில் நீங்கும் என்றும் அடுத்த சில மாதங்களில் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவரும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கரந்தெனிய மற்றும் பலபிட்டிய தொகுதிகளில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில பிரச்சினைகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும் அவை அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், கடனை மீளச் செலுத்துவதன் மூலம் முதலீடுகளை கொண்டுவர முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

முதலீடுகள் மூலம் சம்பளம் அதிகரிப்பதுடன், வரிகள் மற்றும் வங்கிகளின் வட்டிவீதங்களும் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்துக்கா எப்போதும் உழைத்த கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி என்றும் ஒவ்வொரு முறையும் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த போதும் நாடு முன்னேறியது என்றும் சுட்டிக்காட்டினார்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி ஐ.தே.க. அரசாங்கங்களை ஏனைய அரசியல் குழுக்கள் தோற்கடித்த போதிலும் கட்சி எப்போதும் மக்களுக்காகவே நிற்கின்றது என்றார்.

Share.
Exit mobile version