குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், தம்மைக் கைது செய்தமையும், தடுத்து வைத்திருப்பதும் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, 2023 மே 16ஆம் திகதி பரிசீலனைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இது தொடர்பான மனு இன்று (25) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு டாக்டர் சிஹாப்தீன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கலாநிதி சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கலாநிதி ஷிஹாப்தீன் தனது மனுவில், தாம் கைது செய்யப்பட்டதற்கான எந்தவொரு கணிசமான காரணத்தையும் பொலிஸார் குறிப்பிடத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தன்னை கைது செய்து தடுத்து வைத்திருப்பதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.

Share.
Exit mobile version