நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நிதியை கடன் மூலம் பெறுவதற்கு இரண்டு அரச வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன் வசதிகளின் அளவுக்கேற்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு குறைந்தளவிலான துண்டிப்பு நேரங்களுடன் மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி மாதத்துக்கு திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 கப்பல்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இரண்டு கப்பல்கள் இந்த மாதத்துக்குள் வருகைதரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நுரைச்சோலை மின்நிலையத்துக்கு தேவையான 33 நிலக்கரி சரக்குகளில் 10 இறக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரியில் மேலும் 2 கப்பல்களை எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேகேசர தெரிவித்திருந்தார்.

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாதாந்தம் தலா 7 கப்பல்களை வருகைதரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிணங்க, 21 கப்பல்கள் வருகைதரவுள்ளன.

இலங்கை மின்சாரசபையிடம் போதிய பணப் புழக்கம் இன்மை மற்றும் நிதியளிப்பதில் தாமதம் ஆகியவை சரியான நேரத்தில் சரக்குகளை பாதுகாப்பது மற்றும் செயல்முறை தாமதப்படுத்துவது சவாலாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Share.
Exit mobile version