ரின் மீன் உற்பத்தியின் மூலம், தேசிய மட்டத்தில் நுகர்வுத் தேவையினை முழுமையாக பூர்த்தி செய்து கொள்வதற்கும், ரின் மீன் ஏற்றுமதித் துறையினை மேலும் பலப்படுத்துவதற்கும் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அது தொடர்பாக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலின் எழுத்து மூலமான கேள்விக்கு இன்று(05.01.2023) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பதில் அளிக்கும்போதே கடற்றொழில் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

மேலும்,“இத்துறை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகள் உள்ளடங்கியதாக ஒரு கலந்துரையாடலையும் நாம் ஏற்பாடு செய்து சில தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்.

மூலப் பொருட்களின் விலைகள், எரிபொருள் விலை உள்ளிட்ட ஏனைய உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக, தற்போதைய நிலையில் ரின் மீன்களின் உற்பத்திச் செலவினமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களின் விலையைவிட இறக்குமதி செய்யப்படுகின்ற ரின் மீன்களின் விலைகள் குறைவாகக் காணப்படுகின்றன.

குறைந்த விலைக்கு தரமற்ற ரின் மீன்களை இறக்குமதி செய்வதே இதற்குக் காரணமாகும்.

எனவே, தேசிய ரின் மீன் உற்பத்தித்துறைக்கு ஏற்படுகின்ற பாதிப்பினை நிவர்த்திக்கின்ற வகையிலும், விலைகளில் போட்டித் தன்மையை ஏற்படுத்தும் வகையிலும், ஒரு கிலோ கிராம் ரின் மீனுக்கான விசேட வர்த்தக வரியினை 100.00 ரூபாவிலிருந்து 200.00 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு நாம் கடந்த 01.12.2022ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ரின் மீன் உற்பத்திக்கென பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற காணாங் கெளுத்தி எனப்படும் லின்னா மீன் வகைகளின் விலைகள் வருடாந்தம் மாற்றமடைகின்றன. தேசிய ரீதியில் காணாங் கெளுத்தி மீன் வகைகளின் அறுவடைகள் குறைகின்றபோது, ரின் மீன் கைத்தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள் என்ற வகையில் வெளிநாட்டிலிருந்து மெக்கரல் மீனினங்களை மிக விசேட வரிச் சலுகையின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரின் மீன் உற்பத்திக்குத் தேiவாயான மீனினங்களை வளர்க்கக் கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் நாம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், ரின் மீன் உற்பத்திக்கென மூலப் பொருளாக மீனினங்களை இறக்குமதி செய்கின்றபோது, நிலவக்கூடிய தடைகளை களைவதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் (சதொச), முப்படைகள் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களால் ரின் மீன்களை கொள்வனவு செய்கின்றபோது தேசிய ரின் மீன் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதன் ஊடாக தேசிய ரின் மீன் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை விரிவு படுத்துவது எமது நோக்கமாகும்.

அதேநேரம், தேசிய ரின் மீன் உற்பத்திச் சாலைகள் அனைத்தையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்து உரிய கண்காணிப்பிற்கும், முகாமைத்துவத்திற்கும் உட்படுத்தவதற்கும், அனைத்து ரின் மீன் உற்பத்திகளுக்கும் தரச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக முழு கடற்றொழிற்துறையில் பின்னடைவு காணப்பட்டிருந்த போதிலும், தற்போது அவ்வாறானதொரு நிலைமை வெகு குறைவாக இருக்கின்றது.

இத்தகைய நிலையில், ரின் மீன் உற்பத்தியாளர்கள் உற்பத்திச் செலவினங்களுக்கேற்ப தங்களது உற்பத்திகளின் விலைகளை தங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிர்ணயித்துக் கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.

Share.
Exit mobile version