எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெறும் மோசடிகளை முகாமைத்துவம் செய்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையோ அல்லது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவையோ ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எது எவ்வாறாயினும் கூறியதை போன்று மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தொழிற்துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்றும் இது பொருளாதார நெருக்கடியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்றும் நளின் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அரசாங்கத்தின் ஆட்சி காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாகவும் அதனை பெற்றுக்கொள்ள மக்கள் விரும்பும் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தல் மாத்திரமின்றி, அரசாங்கம் முயற்சித்தால் மாகாணசபைத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும் என்றும் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் நளின் பண்டார தெரிவித்தார்.

Share.
Exit mobile version