தலைமுறையின் சிறந்த கால்பந்து நட்சத்திரமாக அறியப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபிய அணியான அல் நாசர் கழக அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய ஊதியமாக வருடத்திற்கு 177 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் பெறுவார் என கூறப்படுகிறது.

முன்னதாக மன்செஸ்டர் யுனைடெட் கழக அணிக்கு விளையாடிவந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்ச்சைக்குரிய நேர்காணலைத் தொடர்ந்து பரபரஸ்பர ஒப்பந்த்த்திற்கு பிறகு அணியிலிருந்து வெளியேறினார்.

அந்த காலகட்டத்தில், மற்றொரு சவுதி அணியான அல் ஹிலால் அணியில் சேர 305 மில்லியன் பவுண்டுகள் அவருக்கு வழங்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதனை அவர் அப்போது நிராகரித்திருந்தார்.

37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசர் கழக அணிக்கு விளையாடுவது குறித்து கூறுகையில், ‘வேறு நாட்டில் ஒரு புதிய கால்பந்து லீக்கை அனுபவிக்க ஆர்வமாக உள்ளேன். ஐரோப்பிய கால்பந்தில் நான் வெற்றிபெற நினைத்த அனைத்தையும் வென்றது எனது அதிர்ஷ்டம் மற்றும் ஆசியாவில் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இது சரியான தருணம் என்று இப்போது உணர்கிறேன்’ என கூறினார்.

ஒன்பது முறை சவுதி ப்ரோ லீக் சம்பியனான அல் நாசர் அணி நிர்வாகம், இதுவொரு வரலாறு என விபரித்தது. ‘எங்கள் லீக், தேசம் மற்றும் வருங்கால சந்ததியினர், சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்களை சிறந்த பதிப்பாக மாற்ற இது ஊக்கமளிக்கும்’ என்று கழகம் கூறியது.

Share.
Exit mobile version