இலங்கையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் சுமார் 110 பேர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,
நாட்டில் உள்ள போக்கு மற்றும் இத்தகைய நடைமுறைகளைத் தடுக்க கடுமையான சட்டங்களின் அவசியத்தை அதிகாரசபை எடுத்துரைத்துள்ளதாகவும் வரிகளை திருத்தவும், புகையிலை மற்றும் மதுபான பயன்பாட்டுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றவும் தாம் முன்மொழிவதாகவும் குறிப்பிட்டார்.
புகைபிடித்தல் மற்றும் புகையிலை பாவனையால் வருடாந்தம் சுமார் 40,000 பேர் இறப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சில சமயங்களில் இதுபோன்ற மரணங்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.
புகையிலை மீதான முன்மொழியப்பட்ட வரிச் சூத்திரம் புகைபிடிப்பதில் இருந்து மக்களைத் தடுக்கும் என்பதுடன் மரணங்களைக் குறைக்க வழிவகுக்கும் என்றும் வரி திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தால் 11 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்றார்.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் புகையிலை மற்றும் மதுபானங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றத் தயங்குவதாக குற்றம் சுமத்திய அவர், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மதகுருமார்களும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை ஊக்குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.