உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் தீவிரமான கையெழுத்துவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
3-3 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை வசமாக்கிக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை.
போட்டி முடிந்ததில் இருந்தே இறுதிப் போட்டி சர்ச்சைகள் தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டன.
ஆன்லைன் மனுக்களை ஒருங்கிணைக்கும் மெஸ்ஓபினியன்ஸ் என்ற இணையத்தில் போட்டியை மீண்டும் நடத்துவது தொடர்பான கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஆன்லைன் மனுவில் ஏற்கெனவே கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
அர்ஜென்டினா அணியின் முதல் இரண்டு கோல்களும் விதிமீறியவை என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் தொட முடியும்? ஃபிஃபா விதிகள் என்ன கூறுகின்றன?
அர்ஜென்டினா – பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருவோரின் முதலாவதாகக் கூறும் காரணம், அர்ஜென்டினாவுக்கு முதல் பெனால்ட்டி வாய்ப்பை வழங்கியிருக்கக் கூடாது என்பதுதான்.
டி பாக்ஸுக்குள் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பாலே அர்ஜென்டினா வீரர் டி மரியா மீது மோதி பந்தைக் கடத்தவிடாமல் செய்ததாக அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 23-ஆவது நிமிடத்தில் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்தார்.
இதுவே அர்ஜென்டினா முன்னிலை பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. அந்தத் தருணத்திலேயே அர்ஜென்டினா ரசிகர்கள் ஆராவாரம் செய்து கொண்டிருந்தாலும், பிரான்ஸ் ரசிகர்கள் அதை பெனால்ட்டியாக ஏற்கவில்லை.
இதற்காக ஆதாரமாக டி மரியாவைத் தொடும் காட்சிகளையும் பிரான்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள். டி மரியா தாமாகவே கீழே விழுந்ததாக பலர் பதிவிட்டார்கள். தமது மற்றொரு கால் தடுக்கியதாலேயே அவர் விழுந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.
இந்த பெனால்ட்டியை வழங்குவதற்கு கள நடுவர், காணொளி உதவியை நாடவில்லை என்பதையும் பிரான்ஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். ஆனால் டெம்பாலே மெதுவாகத் தொட்டாலும், அது பெனால்ட்டிதான் என்று பதிலுக்கு விமர்சனம் செய்து வந்தார்கள்.
இந்த விவாதம்தான் இப்போது ஆன்லைன் மனுவாக உருவெடுத்திருக்கிறது.
இறுதிப் போட்டியின் 36-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கான இரண்டாவது கோலை டி மரியா அடித்தார். அர்ஜென்டினாவின் கோல் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட பந்தை நெடுந் தொலைவு ஓடி வந்து கோலுக்குள் அடித்தார் மரியா.
ஆனால் பந்தைக் கடத்திவரும்போது எம்பாப்பேவை தடுத்து ரொமேரோ ஃபவுல் செய்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனால் டி மரியா அடித்த இரண்டாவது கோலையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சமூக வலைத்தள விவாதங்கள், ஆன்லைன் மனுக்கள், புகார்கள் போன்றவை வைக்கப்பட்டாலும் இறுதிப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.
ஏனென்றால் இதற்கு முன்பு பலமுறையும் போட்டிகள் பற்றிய பல புகார்கள் வந்தாலும் அதற்காக போட்டியை மீண்டும் நடத்தும் முடிவை ஃபிபா எடுத்ததில்லை.
இறுதிப் போட்டியில் முதல் இரண்டு கோல்கள் மாத்திரமல்லாமல் மெஸ்ஸி அடித்த அர்ஜென்டினாவின் மூன்றாவது கோலும் செல்லாது என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் தொடருகின்றன.
எனினும், கூடுதல் நேரத்தின்போது அடிக்கப்பட்ட இந்த கோலின்போது பந்து கோல் லைனை தாண்டி விட்டதால் அது செல்லக்கூடியது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஆடுகளத்துக்கு உள்ளே ஏற்பட்ட சர்ச்சைகளைத் தவிர கொண்டாட்டத்தின்போது சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன.
இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பேயை கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்ட்டினஸ் மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு பியூனோஸ் அயர்ஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது ஒரு குழந்தை பொம்மையில் எம்பாப்பேயின் முகத்தை பொருத்தி கொண்டு வந்தார் மார்ட்டினஸ்.
இந்தப் புகைப்படமும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது. இதற்கு முன்பும் மார்ட்டினஸ் பல முறை எம்பாப்பேயே கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
கத்தார் லூசாய்ல் மைதானத்தில் உலகக் கோப்பையை வென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓய்வு அறையில் எம்பாப்பேக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்க வேண்டும் என்று கூறிய காணொளியும் இதேபோன்ற விமர்சனத்தைப் பெற்றது.