தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அமைக்கப்படும் எந்தவொரு அரசாங்கமும் மக்களின் கருத்துக்கு எதிராக அமையும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஒரு மாதம் கூட வாழ முடியாது என்றும் ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
“ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு வந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் மூளையாக செயற்பட்டவர் இவர்” என அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டை அழிப்பதில் பெயர்பெற்று புதிய அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு அனுப்பப்பட்டவருக்கு அதே அரசாங்கத்தினால் தற்போது பிரதமர் பதவி வழங்கப்படுகின்றதென்பது அவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதையே இது காட்டுவதாகவும் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தாம் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுவதாகவும், மற்றவர்களை அரசாங்கத்தை கைப்பற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்த சில்வா, அவரின் வார்த்தைகளை நம்புவதற்கு எவரும் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். (நியூஸ் வயர்)