ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளரான தினேஸ் ஷாப்டரின் மரணத்துக்கு நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக இருக்கலாமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல், கொழும்பு-கறுவாத்தோட்டத்தில் உள்ள தமது வீட்டில் இருந்து புறப்பட்ட வேளையில், தனக்கு பெருந்தொகை பணத்தை தரவேண்டிய ஒருவரை சந்திக்கச் செல்வதாக தினேஸ் ஷாப்டர், தமது மனைவிடம் கூறிச் சென்றுள்ளார்.
எனினும் நேரமாகியும் அவர் வராதப்படியால், அவரின் மனைவி, கணவரின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்
எனினும் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு அவர் அறிவித்த நிலையில், நிறைவேற்று அதிகாரி பொரளை மயானத்துக்கு அருகில் கையடக்க தொலைபேசி இருந்த இடத்தை கண்டறிந்துள்ளார்.
மயானத்திற்கு சென்று பார்த்தபோது, தினேஸ் ஷாப்டர், அவரது காரின் இருக்கையில் இருந்தபடியே நாடா ஒன்றினால் பிணைக்கப்பட்டு, கழுத்தில் வயர் ஒன்றும் சுற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிறைவேற்று அதிகாரி, உடனடியாகச் செயற்பட்டு, மயானத்தில் இருந்த ஒரு தொழிலாளியின் உதவியுடன் பிணைப்பில் இருந்து விடுவித்து, தினேஸ் ஷாப்டரின் கழுத்தில் இருந்த வயரையும் அகற்றியுள்ளார்.
இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தநிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் காருக்கு அருகில் இருந்து வெளியேறியதை மயானத்தில் இருந்த தொழிலாளர் ஒருவர் பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஷாப்டர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் இரவு 10.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் வெளியாகியிருந்தன.
https://www.youtube.com/watch?time_continue=261&v=81tr0HVuJfQ&embeds_euri=https%3A%2F%2Ftheoldreader.com%2F&source_ve_path=MzY4NDIsMzY4NDIsMzY4NDI&feature=emb_logo