பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான அசார் அலி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் அசார் அலி, இன்று (சனிக்கிழமை) கராச்சியில் ஆரம்பமாகும் டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடையளிப்பதாக அறிவித்தார்.
தனது ஓய்வுக் குறித்து அவர் கூறுகையில், ‘100 டெஸ்டுகளில் விளையாட வேண்டும் என விருப்பப்பட்டேன். இந்தப் பருவத்தில் எல்லா டெஸ்டுகளிலும் விளையாடியிருந்தால் இந்த இலக்கை எட்டியிருப்பேன். இனி அது நடக்காது என்பதால் இளைஞர்களுக்கு வழி விட விரும்பினேன். இது என் சொந்த முடிவு. யாரும் என்னை வற்புறுத்தவில்லை’ என கூறினார்.
2019ஆம் ஆண்டு சர்ஃபராஸ் அஹமது நீக்கத்துக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் தலைவராக 9 டெஸ்டுகளில் அசார் அலி பணியாற்றினார். இவரது தலைமையில் இலங்கை, பங்களாதேஷூற்கு எதிராக சொந்த மண்ணில் இரு டெஸ்ட் தொடர்களை பாகிஸ்தான் அணி வென்றது. எனினும் அச்சமயத்தில் அசார் அலி சரியாக விளையாடாத காரணத்தால் பாகிஸ்தான் அணியின் தலைவராக பாபர் ஆஸம் நியமிக்கப்பட்டார்.
லெக் ஸ்பின்னராக பாகிஸ்தான் அணியில் நுழைந்த அசார் அலி, பிறகு அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மாறி 10 வருடங்களுக்கும் மேலாக விளையாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 2010 முதல் 96 டெஸ்டுகள், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 7097 ஓட்டங்களை குவித்துள்ளார். 19 சதங்கள், 35 அரை சதங்கள் அடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முச்சதம் அடித்த அசார் அலி. பகலிரவு டெஸ்டில் முச்சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.