இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களை பெற்றது.
ஆட்டநேர முடிவில், நஜ்முல் ஹொசைன் 25 ஓட்டங்களுடனும் ஸகீர் ஹசன் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் 513 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷ் அணி, 471 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
சட்டோகிராம் மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 404 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, புஜாரா 90 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், தைஜூல் இஸ்லாம் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் எபொட் ஹொசைன் மற்றும் காலீல் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச முஷ்டபிசுர் ரஹ்மான் 28 ஓட்டங்களையும் மெயிடி ஹசன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, 254 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு இந்தியக் கிரிக்கெட் அணி, 513 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 110 ஓட்டங்களையும் புஜாரா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், காலீல் அஹமட் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 513 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, இன்றைய முன்றாம்நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களை பெற்றது.
இன்னமும் வெற்றிக்காக 471 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 10 விக்கெட்டுகள் மற்றும் இரண்டு நாட்கள் மீதமிருக்க போட்டியின் நான்காவது நாளை, பங்களாதேஷ் அணி நாளை தொடரவுள்ளது.