அரசு ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசின் முடிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் சுமார் 25 ஆயிரம் அரச ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளனர்.

பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தொகையான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் போதிய அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருப்பதால், அரச சேவையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 250 அரச வைத்தியர்களும் இம்மாத இறுதியில் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆயிரத்து 200 செவிலியர்கள் 60 வயதை எட்டியதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version