இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று இடம்பெற்ற நிலையில். தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் இறுதி வாரத்தில் முடிவடைந்தது.
கடந்த மாதம் 27ஆம் திகதி 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று நடந்த வாக்கெடுப்பில் உயர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றம் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெற்றது.
58 வயதான பி.டி.உஷா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளார்.
1986-ம் ஆண்டு நடந்த சியோல் ஆசிய விளையாட்டு போட்டியில் 200, 400, 400 மீற்றர் தடைதாண்டி ஓட்டம் மற்றும் 4 x 400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்களை தட்டி சென்றார். அத்தோடு, 100 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். 1984-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடையோட்ட போட்டியில் 4-வது இடத்தைப் பெற்றார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 95 ஆண்டுகால வரலாற்றில் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அண்மையில் பா.ஜ.க சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.