போதை பொருட்களுடன் ஹட்டன் ஊடாக நுவரெலியா மற்றும் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 10 பேர் ஹட்டன் கோட்ட புலனாய்வு பிரிவு மற்றும் ஹட்டன் பொலிஸார் விசேட குற்றத்தடுப்புப்பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் போதைபொருட்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள போதை பொருள் பாவனையினை தடுக்கும் முகமாக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் 09 ஆம் திகதி ஹட்டன் கோட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய கோட்ட புலனாய்வு பிரிவின் பிரதான பரிசோதகர் தலைமையில் ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் 1318 என்ற மோப்ப நாயினை பயன்படுத்தி கினிகத்தேனை தியகல பகுதியில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பஸ்கள், வேன்கள் போன்றனவற்றில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சுற்றுலா சென்ற பத்து பேர் கேரள கஞ்சா ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நுவரெலியா பிரதேசத்திற்கும் சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்றவர்கள் என்றும். இவர்கள் குருணாகல் கம்பஹா, வரக்காபொல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதே நேரம் போதை பொருள் பாவனையை தடுப்பதற்காக ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு விரிவினர் ரயில்களில் சுற்றுலா செல்பவர்களையும் சோதனையிட விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Share.
Exit mobile version