இரண்டு பாடசாலை சிறுவர்கள் சட்ட விரோதமாக தென்கொரிய நாடகங்களை பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் வடகொரியா இராணுவத்தினர் அவர்களிடம் மேற்கொண்ட. விசாரணையில் அவர்கள் தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை பிறப்பித்துள்ளார். அதன்படி அந்த நாட்டில் சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, இணைய தளத்தை பார்க்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.

அரசு அனுமதித்த இணைய தளங்களை மாத்திரம் பார்க்க முடியும். அரசின் விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

இதனால் வெளி உலக தொடர்பு இல்லாமல் அந்நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர். ஆனாலும் அதையும் மீறி தென் கொரியா நாட்டில் இருந்து பிளாஸ்டிரைவ் போன்ற கருவிகள் வடகொரியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. தென்கொரியா நாடகங்களுக்கு வடகொரியாவில் நல்ல மவுசு உள்ளது. இதனால் இரகசியமாக விற்பனை செய்யப்படும் சி.டி.க்களை வாங்கி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் அமர்ந்து அந்த நாடகங்களை பார்ப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரியாய்சங் என்ற மாகாணத்தில் 16 மற்றும்,17 வயது பாடசாலை சிறுவர்கள் 2 பேர் சட்ட விரோதமாக தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் வடகொரியா இராணுவத்தினர் அவர்களிடம் மேற்கொண்ட. விசாரணையில் அவர்கள் தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி சம்பவத்தன்று 2 சிறுவர்களும் பொது மக்கள் முன்னிலையில் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா சமீபகாலமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ஏதும் அறியாத 2 பாடசாலை சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது

Share.
Exit mobile version