கொவிட் 19 அதிகமாக பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் மஸ்ஜித்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் ஜுமுஆக்களை தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற பல இடங்களிலும் நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டியிருந்தது.
எனினும் தற்போது கொரோனாவுடைய தாக்கம் குறைந்து, மஸ்ஜித்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை தளர்த்த்தப்பட்டு, நிலைமை கட்டுக்கோப்பான ஒரு நிலைக்கு வந்திருப்பதன் காரணத்தினாலும், ஜும்ஆவுக்கென்று ஷாபிஈ மத்ஹபில் சில முக்கியமான நிபந்தனைகள் இருப்பதாலும் குறிப்பாக அனைவரும் ஒரு இடத்தில் ஒன்றுசேர முடியாத நிலைமை இருந்தாலே தவிர, ஒரு ஊரில் ஒரு இடத்தில் மாத்திரமே ஜும்ஆ நடாத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாக, ஏற்கனவே (கொவிட் 19 பரவலுக்கு முன்) ஜுமுஆத் தொழுகை நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த மஸ்ஜித்களில் மாத்திரம் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஜுமுஆக்களை நடாத்துமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கின்றோம்.
சுகாதார வழிகாட்டல்களைப் பேணி ஒரு ஊரில் ஒரு இடத்தில் ஜுமுஆவை நடாத்த முடியாமல் இருந்தால் மாத்திரம் பிறிதொரு இடத்தில் ஜுமுஆவை நடாத்தலாம். எனினும் ஓர் ஊரில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணாது பிறிதொரு இடத்தில் ஜுமுஆ நடைபெறுமாயின் ஷரீஅத்தின் பார்வையில் இரண்டாவது ஜுமுஆ செல்லுபடியற்றதாகும் என ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே இதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஜம்இய்யாவின் கிளைகள் தத்தமது பிரதேசத்திற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு வழிகாட்டி உதவுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா நம்மனைவரது நல்லமல்களையும் ஏற்று அருள்புரிவானாக. ஆமீன்
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ் ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா