மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு அந்த நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது

மியன்மாரில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து 100-க்கும் மேற்பட்டோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கு மரண தண்டனையை ஒரு ஆயுதமாக மியன்மார் இராணுவம் பயன்படுத்துவதாக ஐ.நா. குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு அந்த நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி அவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயமான விசாரணையின் அடிப்படை கோட்பாடுகளை மீறியும், சுதந்திரம் மற்றும் பாரபட்சமின்மைக்கான முக்கிய நீதித்துறை உத்தரவாதங்களுக்கு முரணான வகையிலும் இராணுவம் இரகசிய கோர்ட்டுகள் நடவடிக்கைகளை தொடர்கிறது.

மாணவர்களுக்கு மரண தண்டனை விதித்திருப்பது இராணுவத்தின் பழிவாங்கும் செயலாகும். 7 மாணவர்கள் தவிர்த்து 4 இளைஞர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களுடன் சேர்த்து இதுவரை 139 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Share.
Exit mobile version