அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, எந்தவொரு பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக உள்ளதென தெரிவிக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த 6 ஆயிரம் மாணவர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது யார் எனவும் சபையில் கேள்வி எழுப்பினார்.

கல்வி அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுகளுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் நேற்று (1) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும்போது பொறுத்தமான ஆசிரியர்களை மாற்றீடு செய்துவிட்டே இடமாற்றம் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் உரையாற்றும் அனைவரும் அதிபர், ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை, கொடுப்பனவு பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறார்கள்.

நடைபெற்று முடிந்த சாதாரணதரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாத 6 ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது? 11 வருடங்கள் பாடசாலைகளில் கற்று எந்தவொரு பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு? இது தொடர்பில் எவரும் பேசுவதில்லை எனவும் தெரிவித்தார்.

பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேசுகிறார்கள். வரி அதிகரிப்பால் உபகரணங்கள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர் ஒருவருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக செலுத்துகிறார்கள். இரு பிள்ளைகள் என்றால் செலவு எவ்வளவு? மேலதிக வகுப்புகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து செலவு எவ்வளவு? பாடசாலைகளில் முறையாகக் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இந்த செலவுகளைக் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version