உலகின் பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகளில் பணம் செலுத்தி பல்கலைக்கழகக் கல்வியைப் பெற வேண்டும் என்றும் ஆனால் இலங்கை மாணவர்கள் தமது முதல் பட்டப்படிப்பை எமது நாட்டில் இலவசமாகப் பெறுவது பெரும் பாக்கியம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எனவே, கூடிய விரைவில் கல்வியை முடித்து சமூகத்தில் தமது பொறுப்பை நிறைவேற்றுவதே பல்கலைக்கழக மாணவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் படிப்பை முடிக்காமல், 8 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழகங்களில் தங்கியிருப்பதால், புதிய மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி வாய்ப்புகளை இழக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் நீண்டகாலம் தங்கியிருக்கும் மாணவர்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழகங்களும் உரிய தீர்மானங்களை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version